SA vs PAK, 2nd T20I: சதமடித்து அசத்திய ஹென்றிக்ஸ்; பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!

Updated: Sat, Dec 14 2024 06:20 IST
Image Source: Google

பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று செஞ்சூரியனில் நடைபெற்றது. 

இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் முகம்து ரிஸ்வான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து, தென் ஆப்பிரிக்க அணியை பந்துவீச அழைத்தார். அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு சைம் அயூப் மற்றும் முகமது ரிஸ்வான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முகமது ரிஸ்வான் 11 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த சைம் அயூப் மற்றும் பாபர் ஆசாம் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

இதில் சைம் அயூப் தனது அரைசதத்தையும் பதிவுசெய்தார். அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பாபர் ஆசாம் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 30 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய உஸ்மான் கான் 3 ரன்களுக்கும், தயாப் தாஹிர் 6 ரன்களிலும் என அடுத்தடுத்து சொற்ப் ரன்களுக்கு ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணியும் தடுமாறத்தொடங்கியது. ஆனால் ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சைம் அயூப் தொடர்ந்து பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட்டார்.

அதேசமயம் அவருடன் இணைந்து அதிரடியாக விளையாடி வந்த இர்ஃபான் கான் 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 30 ரன்னில் விக்கெட்டை இழந்தாலும், மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சைம் அயூப் 11 பவுண்டரி 5 சிக்ஸர்கள் என 98 ரன்களையும், அப்பாஸ் அஃப்ரிடி ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 11 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்களைச் சேர்த்தது. தென் ஆப்பிரிக்க அணி தரபபில் ஓட்னீல் பார்ட்மேன், தயான் கலீம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ரிஸா ஹென்றிக்ஸ் மற்றும் ரியான் ரிக்கெல்டன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ரியான் ரிக்கெல்டன் 2 ரன்னில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய மேத்யூ பிரீட்ஸ்கியும் 12 ரன்களுடன் நடையைக் கட்டினார். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 28 ரன்னில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ரீஸா ஹென்றிக்ஸுடன் இணைந்த ரஸ்ஸி வேன்டர் டுசென் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். 

அதேசமயம் இப்போட்டியில் தொடக்க் வீரராக களமிறங்கிய ரிஸா ஹென்றிக்ஸ் அடுத்தடுத்து பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டு எதிரணி பந்துவீச்சாளர்களை அழுத்தத்தில் தள்ளினார். இதில் அபாரமாக விளையாடிய ரீஸா ஹென்றிக்ஸ் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவருடன் இணைந்து விளையாடி வந்த ரஸ்ஸி வேன்டர் டூசெனும் தனது அரைசத்தைப் பதிவுசெய்ததன் மூலம் அணியின் வெற்றியும் உறுதியானது. பின் 7 பவுண்டர், 10 சிக்ஸர்கள் என 117 ரன்களை எடுத்த கையோடு ரீஸா ஹென்றிக்ஸ் தனது விக்கெட்டை இழந்தர். 

Also Read: Funding To Save Test Cricket

இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரஸ்ஸி வேன்டர் டூசென் 3 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 66 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் தென் ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. இப்போட்டியில் சதமடித்து அசத்திய ரீஸ ஹென்றிக்ஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை