எஸ்ஏ20 2025: பார்ல் ராயல்ஸை வீழ்த்தி எம்ஐ கேப்டவுன் அசத்தல் வெற்றி!

Updated: Tue, Jan 14 2025 09:10 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் மூன்றாவது சீசன் எஸ்ஏ20 லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 6ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் மற்றும் பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற எம்ஐ கேப்டவுன் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து பார்ல் ராயல்ஸை பந்துவீச அழைத்தது. 

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டவுன் அணிக்கு ரியான் ரிக்கெல்டன் மற்றும் ரஸ்ஸி வேன்டர் டுசென் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ரிக்கெல்டன் 8 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் வேன்டர் டுசெனுடன் இணைந்த ரீஸா ஹென்றிக்ஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயரத்தொடங்கியது. இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டாவது விக்கெட்டிற்கு 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் அரைசதத்தை நெருங்கிய ரஸ்ஸி வேண்டர் டுசென் 43 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய அனுபவ வீரர் காலின் இங்ரம் 7 ரன்களிலும், ஜார்ஜ் லிண்டே ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழ்ந்து ஏமாற்றமளித்தனர். இருப்பினும் மறுமுனையில் பொறுப்புடன் விளையாடி வந்த ரீஸா ஹென்றிக்ஸ் தனது அரைசதத்தை பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 59 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஹென்றிக்ஸும் தனது விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த டெவால்ட் பிரீவிஸ் - டெலானோ போட்ஜீட்டர் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். 

இதில் டெவால்ட் பிரீவிஸ் 14 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பிய நிலையில், மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டெலானோ போட்ஜீட்டர் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 29 ரன்களைச் சேர்த்து கடைசி பந்தில் விக்கெட்டை இழந்தார். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களைச் சேர்த்தது. பார்ல் ராயல்ஸ் தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய தயான் கலீம் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய பார்ல் ராயல்ஸ் அணிக்கு லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் - ஜோ ரூட் இணை அதிரடியான தொடக்கத்தை வழங்கி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இதில் அபாரமாக விளையாடி வந்த ஷாய் ஹோப் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 26 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 26 ரன்களில் பிரிட்டோரியஸும் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய சாம் ஹைனும் 20 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு நடையைக் கட்டினார். 

பின்னர் களமிறங்கிய வீரர்களில் மிட்செல் வான் பியூரென், கேப்டன் டேவிட் மில்லர், தயான் கலீம், தினேஷ் கார்த்திக், பிஜோர்ன் ஃபோர்டூன் உள்ளிட்டோர் அடுத்தடுத்து சொற்பமான ரன்களில் விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இறுதியில் முஜீப் உர் ரஹ்மான் மற்றும் குவேனா மபாகா இணை அதிரடியாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சில் இறங்கினர். பின்னர் அபாரமாக விளையாடிய முஜீப் உர் ரஹ்மான் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 34 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். 

Also Read: Funding To Save Test Cricket

இறுதியில் குவேனா மபாகா ரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 22 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் பார்ல் ராயல்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை மட்டுமே சேர்த்தது. கேப்டவுன் அணி தரப்பில் ஜார்ஜ் லிண்டே 3 விக்கெட்டுகளையும், காகிசோ ரபாடா, ராஷித் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் எம்ஐ கேப்டவுன் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் பார்ல் ராயல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை