விராட் கோலிக்கு இந்த பலவீனம் இருக்கிறது - சஞ்சய் பாங்கர்!
இந்தியா-ஆஸ்திரேலியா இடையான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது. இரு அணிகளும் அதிதீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக கடைசி மூன்று டெஸ்ட் தொடரிலும் விராட் கோலி எதிர்பார்த்தவாறு செயல்படவில்லை குறிப்பாக அவரது தரத்திற்கு நிகராக இல்லை என்று விமர்சனங்கள் எழுந்திருக்கிறது.
அத்துடன் கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக டெஸ்ட் தொடரில் சதம் அடிக்காமல் தவித்து வருகிறார். அந்த குறையையும் தீர்ப்பதற்கு இந்த டெஸ்ட் தொடரை விராட் கோலி பயன்படுத்தியாக வேண்டும் என்கிற கட்டாயத்திலும் இருக்கிறார். ஆஸ்திரேலியா அணியும் 19 வருடங்களாக இந்தியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்ற முடியாமல் தவித்து வருகிறது.
கடைசியாக 2004ஆம் ஆண்டு வென்றது குறிப்பிடத்தக்கது. இம்முறை அந்த குறையை தீர்ப்பதற்கு ஆஸ்திரேலியா அணியும் முனைப்பில் இருப்பதால் இரு தரப்பில் இருந்தும் மிக சிறப்பான ஆட்டத்தை எதிர்பார்க்கலாம்.
இந்நிலையில் விராட் கோலிக்கு பேட்டிங்கில் இரண்டு பலவீனங்கள் உள்ளது. அதை ஆஸ்திரேலியா அணி பயன்படுத்திக் கொண்டு அவரது விக்கெட் எடுப்பதற்கு பெருமளவில் முயற்சிக்கும். அது நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் கோச் சஞ்சய் பாங்கர் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “விராட் கோலி அதிக அளவில் இந்த இரண்டு விஷயங்களை அவரது பேட்டிங்கில் செய்ய மாட்டார். இதனால் நாதன் லயன் பந்துவீச்சில் விக்கெட் இழப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. அதில் ஒன்று, பந்து அதிக அளவில் டர்ன் ஆகும்பொழுது, பந்து பிட்ச் ஆவதற்கு முன்னர் இறங்கி அடித்துவிட வேண்டும். விராட் கோலி அப்படி செய்யமாட்டார். அதை கவர் திசையில் அடிக்க முயற்சிப்பார். அப்போது அவுட்டாக வாய்ப்புள்ளது.
அடுத்ததாக, அதிக அளவில் ஸ்வீப் அடிக்க மாட்டார். இதுவும் ஸ்பின்னர்களை எதிர்கொள்வதற்கு பிரச்சனையாக இருக்கும். இவற்றை கவனமாகக் கொண்டு விராட் கோலி பேட்டிங் செய்ய வேண்டும். அவரது விக்கெட் ஆஸ்திரேலியா போன்ற அணிக்கு எதிராக மிகவும் முக்கியமானது” என்று தெரிவித்துள்ளார்.