ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்கவுள்ளது. மேலும் இத்தொடருக்கான முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டி அட்டவணையையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து இத்தொடருக்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. மேலும் இத்தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பை பெறுவார்கள் என்பதால், இத்தொடர் மீது கூடுதல் கவனம் பெற்றுள்ளது.

Advertisement

இந்நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார். கடந்தாண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் போது காயமடைந்த முகமது ஷமி, அதன்பின் நடைபெற்ற ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட தொடர்களையும் காயம் காரணமாக தவறவிட்டார்.

Advertisement

அதுமட்டுமின்றி சமீபத்தில் நடைபெற்று முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்தும் விலகினார்.  இருப்பினும் அவர் ஐபிஎல் தொடருக்கு முன் முழு உடற்தகுதியை எட்டி கம்பேக் கொடுப்பார் என ரசிகர்கள்  பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் தனது இடது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக முகமது ஷமி இங்கிலாந்து சென்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதால் நடப்பு ஐபிஎல் சீசனிலிருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருந்தார். 

இதையத்தொடர்ந்து  இந்தாண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பை போட்டியில் இருந்து கணுக்கால் காயம் காரணமாக இந்திய வீரர் முகமது சமி விலகியுள்ளதாக பிசிசிஐ தலைவர் ஜெய்ஷா சமீபத்தில் அறிவித்து ரசிகர்களுக்கு அடுத்த அதிர்ச்சியைக் கொடுத்தார். டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து முகமது சமி விலகியுள்ளது இந்திய அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் நடந்து முடிந்த ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் முகமது ஷமி 7 போட்டிகளில் மட்டுமே விளையாடி 24 விக்கெட்டுகள் வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில் இங்கிலாந்து சென்று தனது அறுவை சிகிச்சையை முடித்துள்ள முகமது ஷமி இன்றைய தினம் இந்தியா திரும்பியுள்ளார். இதுகுறித்து ஷமி தனது சமூகவலைதள பதிவில், “அறுவை சிகிச்சைக்குப் பிறகு இந்தியா திரும்புவது மகிழ்ச்சியளிக்கிறது. எனது இந்த அடுத்த அத்தியாயத்தைத் தொடர்வதற்கு வலுவாகவும் தயாராகவும் உணர்கிறேன். நான் குணமடைய வேண்டிய அனைவரின் ஆதரவிற்கும் அன்பிற்கும்  நன்றிகள்” என பதிவுசெய்துள்ளார். இவரது பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News