அயர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியானது அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து அயர்லாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு கேப்டன் பால் ஸ்டிர்லிங் மற்றும் ரோஸ் அதிர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் முதல் ஓவரிலேயே அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்த ரோஸ் அதிர் 3 பவுண்டரி ஒரு சிக்ஸர் என 18 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து கேப்டன் பால் ஸ்டிர்லிங்கும் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்து நடையைக் கட்டினார்.
பின்னர் இணைந்த ஹாரி டெக்டர் - கர்டிஸ் காம்பெர் இணை அணியை சரிவிலிருந்து மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கினர். இதில் 16 ரன்கள் எடுத்த நிலையில் ஹாரி டெக்டர் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் காம்பெருடன் ஜோடி சேர்ந்த நெய்ல் ராக் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் விக்கெட் இழப்பையும் தடுத்து நிறுத்தினர். இதில் தொடர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இருவரும் இணைந்து 4ஆவது விக்கெட்டிற்கு 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். பின்னர் 39 ரன்கள் எடுத்த நிலையில் நெய்ல் ராக் தனது விக்கெட்டை இழந்தார்,
அதேசமயம் மறுபக்கம் அரைசதத்தை நெருங்கிய கர்டிஸ் காம்பெரும் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 49 ரன்களில் ஆட்டமிழந்து, ஒரு ரன்னில் அரைசதத்தை தவறவிட்டார். இறுதியில் ஜார்ஜ் டக்ரேல் 21 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணியானது 8 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களைச் சேர்த்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய பேட்ரிக் க்ரூகர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ரியான் ரிக்கெல்டன் - ரீஸா ஹென்றிக்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்ததுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்து கொடுத்தனர். இருவரும் இணைந்து தொடக்கம் முதலே பவுண்டரிகளையும், சிக்ஸர்களை பறக்கவிட்டு அசத்தியதுடன் தங்களது அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினர். இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 126 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் 5 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 51 ரன்கள் எடுத்திருந்த ரீஸா ஹென்றிக்ஸ் தனது விக்கெட்டை இழந்தார்.
Also Read: Funding To Save Test Cricket
அவரைத்தொடர்ந்து அதிரடியான அட்டத்தை வெளிப்படுத்திய ரியான் ரிக்கெல்டனும் 3 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 76 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் மெத்யூ பிரீட்ஸ்கீ 19 ரன்களையும், ஐடன் மார்க்ரம் 17 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணியானது 17.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இதன் வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.