இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் தலா 230 ரன்களைச் சேர்த்து போட்டியை டையில் முடித்தனர். இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஏற்கனெவே முதல் போட்டியில் இரு அணிகளும் வெற்றிகாக கடுமையாக போராடிய நிலையில் போட்டியில் டையில் முடிந்ததால், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலை பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக இலங்கை அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் செய்தி ஒன்றை இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, இலங்கை அணியின் மிகமுக்கிய ஆல் ரவுண்டரான வநிந்து ஹசரங்கா காயம் காரணமாக எஞ்சியுள்ள ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி இந்திய அணிக்கு எதிரான முதல் போட்டியின் போது, தனது கடைசி ஓவரை வீசிய வநிந்து ஹசரங்கா அந்த ஓவரின் கடைசி பந்தின் போது காயமடைந்ததன் காரணமாக அவர் இத்தொடரில் இருந்து விலகியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஹசரங்கா 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், பேட்டிங்கிலும் 24 ரன்களைச் சேர்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தொடரில் இருந்து விலகிய வநிந்து ஹசரங்காவிற்கு பதிலாக எஞ்சியுள்ள போட்டிகளுக்கு ஜெஃப்ரி வாண்டர்சே மாற்று வீரராக இலங்கை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே ஒருநாள் தொடரில் இருந்து இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் மதீஷா பதிரானா மற்றும் தில்ஷன் மதுஷங்கா ஆகியோர் காயம் காரணமாக விலகிய நிலையில், தற்சமயம் வநிந்து ஹசரங்காவும் ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அடுத்தடுத்த போட்டிகளில் இலங்கை அணி எவ்வாறு இந்திய அணியை சமாளிக்கும் என்ற கேள்வியும் எழத்தொடங்கிவுள்ளது.
இலங்கை ஒருநாள் அணி: சரித் அசலங்கா (கே), பதும் நிஷங்கா, அவிஷ்க ஃபெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனாகே, நிஷான் மதுஷ்க, துனித் வெல்லலாகே, சாமிக்க கருணாரத்ன, அகிலா தனஞ்செயா, மொகம்து ஷிராஸ், மஹீஸ் தீக்ஷனா, அசித்த ஃபெர்னாண்டோ, இஷான் மலிங்கா, ஜெஃப்ரி வண்டர்சே.