அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற மிக முக்கியாமன் 35ஆவது லீக் போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. செயின்ட் லூசியாவில் உள்ள டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ஸ்காட்லாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. 

Advertisement

அதன்படி வாழ்வா சாவா ஆட்டத்தில் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணிக்கு ஜார்ஜ் முன்ஸி மற்றும் மைக்கேல் ஜோன்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் மைக்கேல் ஜோன்ஸ் 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் முன்ஸியுடன் இணைந்த பிராண்டன் மெக்முல்லன் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருவரும் இணைந்து தொடர்ந்து அதிரடியாக விளையாடியதுடன் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசி ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர். அதிலும் தொடர்ந்து அதிரடி காட்டிய பிராண்டன் மெக்முல்லன் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார்.  

Advertisement

இதன் மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 89 ரன்களைக் கடந்த நிலையில், 2 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 35 ரன்களைச் சேர்த்திருந்த ஜார்ஜ் முன்ஸி விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதேசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பிராண்டன் மெக்முல்லனும் 2 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 60 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ரிச்சி பெர்ரிங்டன் ஒருபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் களமிறங்கிய மேத்யூஸ் கிராஸ் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அடுத்து களமிறங்கிய மைக்கேல் லீஸ்கும் 5 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளிக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் ரிச்சி பெர்ரிங்டன் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 41 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஸ்காட்லாந்து அணியானது 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்களைச் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில்  கிளென் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா மற்றும் நாதன் எல்லிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினர். 

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் - டிராவிஸ் ஹெட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டேவிட் வார்னர் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து அதிர்ச்சியளித்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷும் 8 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, ஆஸ்திரேலிய அணி பவர் பிளே ஓவர்களுக்கு குள்ளேயே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அவர்களைத்தொடர்ந்து வந்த கிளென் மேக்ஸ்வெல்லும் 11 ரன்களில் நடையைக் கட்டினார். 

இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி 60 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் டிராவிஸ் ஹெட்டுடன் இணைந்த மார்கஸ் ஸ்டொய்னிஸ் தொடக்கத்தில் நிதானம் காட்டிலும், அதன்பின் அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்ஸர்களையும் விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். அதேசமயம் மறுபக்கம் நிதானமாக விளையாடி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன், பொறுப்பை உணர்ந்து விளையாடிய டிராவிஸ் ஹெட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணியின் வெற்றியும் உறுதியானது. 

Advertisement

அதன்பின் இன்னிங்ஸின் 16ஆவது ஓவரில் அடுத்தடுத்து மூன்று சிக்ஸர்களை விளாசிய டிராவிஸ் ஹெட், நான்காவது சிக்ஸரை அடிக்கும் முயற்சியில் மைக்கேல் ஜோன்ஸிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இருப்பினும் அவர் இப்போட்டியில் 5 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 68 ரன்களைக் குவித்திருந்தார். அதன்பின் மறுபக்கம் தொடர்ந்து அதிரடியைக் கைவிடாத மார்கஸ் ஸ்டொய்னிஸ் 25 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். அதன் பின்னரும் பவுண்டரிகளை விளாசிய நிலையில் 9 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 59 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அட்டத்தின் பரபரப்பும் கூடியது. 

ஆனாலும் அடுத்து வந்த டிம் டேவிட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, ஆஸ்திரேலிய அணியானது 19.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த தோல்வியின் மூலம் ஸ்காட்லாந்து அணியாந்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறு வாய்ப்பை இழந்து லீக் சுற்றுடன் வெளியேறியுள்ளது. அதேசமயம் ஸ்காட்லாந்தின் இந்த தோல்வியின் மூலம் இங்கிலாந்து அணியானது நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News