ஐசிசி டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் ஜெர்ஸியை அறிமுக படுத்திய ரோஹித் & ஜெய் ஷா!

Updated: Mon, May 13 2024 20:25 IST
Image Source: Google

ஐசிசியின் டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. மொத்தம் 20 அணிகள் கலந்துகொள்ளும் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் நாளூக்கு நாளு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்த வண்ணமே உள்ளன. அதன்படி 20 அணிகளும் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.

இத்தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் ஜூன் 5ஆம் தேதி அயர்லாந்து அணியை எதிர்த்து களமிறங்கவுள்ளது. இந்த போட்டி நியூ யார்க்கில் உள்ள நாசவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஐசிசி நடத்தும் உலகக் கோப்பைத் தொடர்களில் பங்கு பெறும் அணிகள் பிரத்யேக ஜெர்ஸியில் களமிறங்குவது வழக்கம். இதனால் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தங்களது பிரத்யேக ஜெர்ஸிகளை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

அவ்வகையில் இந்திய அணியின் டி20 உலகக்கோப்பை தொடருக்கான பிரத்யே ஜெர்ஸி மற்றும் வீரர்களுக்கான உபகரண உடைகளை பிசிசிஐ இன்று அறிமுகம் செய்தது. இந்த அறிமுக விழாவானது குஜராத் மாநிலம் அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த அறிமுக விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

முன்னதாக இந்திய அணியின் ஜெர்ஸி ஸ்பான்ஷர் அடிடாஸ் நிறுவனம் வெளியிட்ட டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி ஜெர்ஸி குறித்த காணொளிக்கு பல்வேறு விதமான கருத்துக்களையும், விமர்சனங்களையும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தெரிவித்து வந்தனர். குறிப்பாக இந்த ஜெர்ஸி 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வீரர்களுக்கு வழங்கப்பட்ட ஜெர்சியைப் போல் இருப்பதாக பலரும் தங்களது ஆதங்கத்தை தெரிவித்திருந்தனர்.  

இந்நிலையில் இந்திய அணியின் பயண ஜெர்ஸி, பயிற்சி ஜெர்ஸி மற்றும் போட்டிக்கான ஜெர்ஸி என மூன்று வகையான ஜெர்ஸியை பிசிசிஐ இன்று அறிமுகம் செய்தது. இதில் அணியின் பயண ஜெர்ஸியானது வெள்ளை மற்றும் கருப்பு நிறத்திலும், பயிற்சி ஜெர்ஸியானது நீலம் மற்றும் மஞ்சள் நிறத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் போட்டிக்கான ஜெர்ஸியானது நீலம் மற்றும் ஆரஞ்சு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இதனை இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இருவரும் ஒருசேர அறிமுகப்படுத்தியுள்ளனர். இதனை பிசிசிஐ தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் காணொளியாக பதிவிட்டுள்ளது. இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் புதிய ஜெர்ஸி அறிமுக விழா குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை