T20 WC 2024: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தான் வீழ்த்தி அமெரிக்கா அசத்தல் வெற்றி - ஹைலைட்ஸ் காணொளி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 11ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டல்லாஸில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் நட்சத்திர வீரர்கள் சோபிக்க தவறிய காரணத்தால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் பாபர் ஆசாம் 44 ரன்களும், ஷதாப் கான் 40 ரன்களையும் சேர்த்தனர். அமெரிக்க அணி தரப்பில் கெஞ்ஜிகே 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய அமெரிக்க அணியில் ஸ்டீவன் டெய்லர் 12 ரன்களில் ஆட்டமிழந்தாலும், கேப்டன் மொனாங்க் படேல் 50 ரன்களையும், ஆண்ட்ரிஸ் கஸ் 35 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆரோன் ஜோன்ஸ் 36 ரன்களையும், நிதீஷ் குமார் 14 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான ரன்களைச் சேர்த்தனர். இதன்மூலம் அமெரிக்க அணியும் 20 ஓவர்கள் ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமா இழந்து 159 ரன்களைச் சேர்த்ததன் மூலம் இப்போட்டியானது சமனில் முடிந்து, சூப்பர் ஓவருக்கு சென்றது.
இதையடுத்து சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணியானது 18 ரன்களைச் சேர்த்து அசத்த, பாகிஸ்தான் அணியானது 13 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் அமெரிக்க அணியானது சூப்பர் ஓவரில் 5 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக தங்களது முதல் போட்டியிலேயே அமெரிக்க அணியானது அபார வெற்றியைப் பதிவுசெய்து வரலாற்று சாதனையைப் படைத்து அசத்தியுள்ளது.
மேலும் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடியுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், குரூப் ஏ பிரிவு புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கும் முன்னேறி அசத்தியுள்ளது. இதன்மூலம் தங்களது முதல் டி20 உலகக்கோப்பை தொடரிலேயே சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பையும் பிரகாசப்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க அணிகள் மோதிய முழு போட்டியின் ஹைலைட்ஸ் காணொளியானது தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன், ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.