ரசிகர்களுக்கு இன்றைய ஆட்டம் அதிருப்தியை கொடுத்திருக்கலாம் - ராகுல் டிராவிட்!

Updated: Mon, Nov 20 2023 11:10 IST
Image Source: Google

அஹ்மதாபாத்தில் நடைபெற்ற முடிந்த ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலிய அணியானது ஆறாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரசிகர்களுக்கு முன்னர் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இருந்தாலும் இந்த தொடரின் இறுதிப்போட்டியை தவிர்த்து இந்திய அணி விளையாடிய பத்து ஆட்டங்களிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றிருந்தது. குறிப்பாக ரோஹித் சர்மா இந்த தொடரில் 597 ரன்கள் குவித்து கோலிக்கு அடுத்து இந்த தொடரில் அதிக ரன்கள் அடித்து வீரராக தனது பெயரை பதிவு செய்தார். அதோடு இறுதி போட்டியிலும் 31 பந்துகளை சந்தித்த அவர் 47 ரன்கள் சேர்த்து அதிரடியான தொடக்கத்தை அளித்தார். 

இருப்பினும் இந்திய அணியின் பேட்டிங் சரிவு மற்றும் ஆஸ்திரேலியா அணியின் ஆதிக்கம் ஆகியவை காரணமாக இந்த போட்டியை இந்திய அணி இழந்தது. இந்நிலையில் இந்த இறுதிப் போட்டி முடிந்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட இந்திய அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட், ரோஹித் சர்மாவின் கேப்டன்சி மற்றும் பேட்டிங் குறித்த தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். 

இது குறித்து பேசிய அவர், “இது ஒரு கடினமாக நாளாகவே இருந்தது. இந்தத் தொடர் முழுவதுமே சிறப்பான ஆட்டத்தை விளையாடியிருக்கிறோம். எங்கள் அணியினரின் செயல்பாட்டை எண்ணி பெருமைக் கொள்கிறேன். இறுதிக்கட்டத்தில் மட்டும்தான் எங்களால் வெற்றிக்கானதை செய்ய முடியவில்லை. ஆஸ்திரேலியா சிறப்பாக விளையாடிவிட்டார்கள். அவர்களுக்கு வாழ்த்துகள். நாங்கள் இந்தத் தொடரில் தயக்கத்துடனும் பயத்துடனும் விளையாடினோம் என சொல்வதை ஏற்கமாட்டோம். இந்தப் போட்டியையே எடுத்துக்கொள்ளுங்கள் இதில் முதல் 10 ஓவர்களில் நாங்கள் 80 ரன்களை எடுத்திருந்தோம். 

ஆனால், விக்கெட்டுகள் விழுந்தது. விக்கெட்டுகள் விழும்போது கொஞ்சம் நின்று ஆட வேண்டும். அதைத்தான் எங்கள் வீரர்கள் செய்தார்கள். ஆனால், பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்து அட்டாக் செய்ய நினைக்கும் போது மீண்டும் விக்கெட் விழுந்தது. அதனால் மீண்டும் அந்த ப்ராசஸை தொடங்க வேண்டியிருந்தது. இதுதான் பிரச்சனை. இதனால் எங்களால் பவுண்டரிக்களை அடிக்க முடியவில்லை. ஸ்ட்ரைக்கை மட்டுமே ரொட்டேட் செய்ய முடிந்தது. ரசிகர்களுக்கு எங்களின் இன்றைய ஆட்டம் அதிருப்தியை கொடுத்திருக்கலாம். 

ஆனால், இந்த தொடர் முழுவதும் ரசிகர்களுக்கு நல்ல கிரிக்கெட்டை விருந்தாக்கியிருக்கிறோம். நாங்கள் 11 நகரங்களுக்கு பயணித்து போட்டிகளில் ஆடியிருக்கிறோம். எல்லா மைதானங்களிலும் ரசிகர்கள் எங்களுக்காக திரளாக வந்திருந்து ஆதரவு தெரிவித்திருந்தார்கள். ரசிகர்கள் இல்லாமல் என்ன கிரிக்கெட்டை நம்மால் ஆடிவிட முடியும். இப்படியொரு பேரார்வமிக்க ரசிகர்களுக்கு மத்தியில் ஆடியதில் எங்களுக்குதான் பெருமை. ரோஹித் மட்டுமல்ல அணியில் இருக்கும் அத்தனை வீரர்களும் கவலையில்தான் இருக்கிறார்கள். ட்ரெஸ்ஸிங் ரூமில் அவர்களின் உணர்ச்சிகளை பார்க்க வேதனையாக இருக்கிறது.

அவர்கள் இதற்காக எவ்வளவு உழைத்திருக்கிறார்கள் என எனக்கு தெரியும். அப்படியிருக்கையில் அவர்கள் உடைந்து நிற்பதை என்னால் பார்க்க முடியவில்லை. ஆனால், இதுதான் விளையாட்டு. இதில் இப்படியெல்லாம் நடக்கத்தான் செய்யும். அன்றைய நாளில் சிறப்பாக ஆடும் அணியே வெல்ல முடியும். நாளை எந்த மாற்றமும் இல்லாமல் சூரியன் உதிக்கத்தான் போகிறது. நாங்கள் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வோம். அதை வருங்காலத்தில் அப்ளை செய்வோம். சில சமயங்களில் விளையாட்டில் ஒரு உச்சபட்சத்தை நாம் அனுபவிக்க வேண்டியிருக்கும். சில சமயங்களில் கடும் வீழ்ச்சியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். 

ஆனால், எப்போதுமே நம்முடைய பயணத்தை நிறுத்திவிடக்கூடாது. முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும். அப்படியில்லாமல் தேங்கி நின்றால் எதையும் நம்மால் கற்றுக்கொள்ள முடியாது. எந்த உச்சங்களையும் எந்த வீழ்ச்சியையும் நம்மால் சந்திக்க முடியாது. நான் பயிற்சியாளராக தொடர்வேனா இப்போது இருக்கும் வீரர்கள் 2027 உலகக்கோப்பையில் ஆடுவார்களா என நிறைய கேள்விகளை கேட்கிறீர்கள். அதற்கெல்லாம் என்னால் இப்போது பதில் சொல்லவே முடியாது. ஒரு பெரிய போட்டியை இப்போதுதான் முடித்துவிட்டு வந்திருக்கிறேன். 

எங்களின் எண்ணம் முழுவதும் இந்தப் போட்டியையும் இந்தத் தொடரையும் மையப்படுத்தியாக மட்டுமே இருந்தது. நாங்கள் வேறு எதைப் பற்றியும் யோசிக்கவே இல்லை. அதனால் அதைப் பற்றியெல்லாம் இப்போது பேச முடியாது. டி20 உலகக்கோப்பையின் அரையிறுதி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி, இப்போது இந்த போட்டி இந்த மூன்று முக்கிய தோல்விகளிலுமே நானும் இருந்திருக்கிறேன். குறிப்பிட்ட அந்த நாட்களுக்காக வீரர்கள் மனதளவில் மிகச்சிறப்பாக தயாராகியிருந்தார்கள். ஆனால், அந்த நாளில் எங்களால் எதிரணியை விட சிறப்பான செயல்பாடுகளை கொடுக்க முடியவில்லை. அதுதான் பிரச்சனை” என கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை