ஐக்கிய அரபு அமீரக அணியில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணியும், இரண்டாவது போட்டியில் யுஏஇ அணியும் வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்தது.

Advertisement

இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி பந்துவீச முடிவுசெய்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு வழக்கம் போல சாத் பௌஸ் மற்றும் டிம் செய்ஃபெர்ட் இணை களமிறங்கினர். 

Advertisement

இதில் சாத் பௌஸ் 9 ரன்களுக்கும், செய்ஃபெர்ட் 13 ரன்களுக்கும் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் இணைந்த வில் யங் மற்றும் மார்க் சாப்மேன் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தடுத்து அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். 

பின் 56 ரன்களில் வில் யங்கும், 51 ரன்களுக்கு மார்க் சாப்மேனும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஃபாக்ஸ்கிராஃப்ட் 10 ரன்களில் நடையைக் கட்டினார். இறுதியில் மிட்செல் சாண்டர் அதிரடியாக விளையாடி 20 ரன்களைச் சேர்த்து உதவினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களைச் சேர்த்தது. ஐக்கிய அரபு அமீரக அணி தரப்பில் ஜுனைத் சித்திக் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.  

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய யுஏஇ அணியில் முகமது வசீம் 8 ரன்களிலும், அர்யான்ஷ் சர்மா 16 ரன்களிலும், விரித்தியா அரவிந்த் 12 ரன்களுக்கும், ஆசிஃப் கான் 11 ரன்களுக்கும், அன்ஷ் டண்டன் ஒரு ரன்னிற்கும் என டாப் ஆர்டர் வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

பின்னர் இணைந்த பசில் ஹமீத் - அயன் அஃப்சல் கான் இணை ஓரளவு தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்தினர். பின் பசில் ஹமீத் 24 ரன்களில் ரன் அவுட்டாகிட, மறுபக்கம் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அஃப்சல் கானும் 42 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதனால் யுஏஇ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை மட்டுமே எடுத்தது. 

Advertisement

நியூசிலாந்து அணி தரப்பில் பென் லிஸ்டர் 3 விக்கெட்டுகளையும், கைல் ஜேமிசன், மிட்செல் சாண்ட்னர், ஆதித்யா அஷோக் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதன்மூலம் நியூசிலாந்து அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியை வீழ்த்தி 2-1 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றி அசத்தியது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News