இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியதுடன் 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இதன் மூலம் இலங்கை அணியானது கடந்த 1997ஆண்டுக்கு (27 ஆண்டுகளுக்கு)பிறகு இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது.
அதன்படி இப்போடியில் டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியில் அவிஷ்கா ஃபெர்னாண்டோ 98 ரன்களையும், குசால் மெண்டிஸ் 59 ரன்களையும் குவித்தததன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அறிமுக வீரராக களமிறங்கிய ரியான் பராக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி பேட்டர்கள் சோபிக்க தவறினர்.
இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா 35 ரன்களையும், வாஷிங்டன் சுந்தர் 30 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டியதால் 138 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. இலங்கை அணி தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய துனித் வெல்லாலகே 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் அவிஷ்கா ஃபெர்னாண்டோ ஆட்டநாயகன் விருதையும், துனித் வெல்லாலகே தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.
இந்நிலையில், இப்போட்டியின் போது இலங்கை அணி வேகப்பந்து வீச்சாளர் அசிதா ஃபெர்னாண்டோ இந்திய வீரர் விராட் கோலியுடன் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்திய நிகழ்வானது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதன்படி இன்னிங்ஸின் நான்காவது ஓவரை வீசிய அசிதா ஃபெர்னாண்டோ அந்த ஓவரில் ஷுப்மன் கில்லின் விக்கெட்டை வீழ்த்தினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி பவுண்டரி அடித்து தனது இன்னிங்ஸைத் தொடங்கினார்.
மேற்கொண்டு அந்த ஓவரின் கடைசி பந்தை விராட் கோலி தடுத்து நிறுத்திய நிலையில், அசிதா ஃபெர்னாண்டோ விராட் கோலியை பார்த்து ஏதோ கூறினார். உடனே விராட் கோலியும் அதற்கு எதே கூறினார். இதனால் களத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அதன்பின் இப்போட்டியில் 20 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விராட் கோலி தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பிய சமயத்திலும், அசிதா ஃபெர்னாண்டோ சில வார்த்தைகளை கூறி வழியனுப்பினார். இந்நிலையில் அசிதா ஃபெர்னாண்டோ விராட் கோலியுடன் ஆக்ரோஷமாக நடந்து கொண்ட காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது .