வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகளை உள்ளடக்கிய ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி தம்புளாவில் உள்ள ரங்கிரி தம்புளா சர்வதேச மைதானத்தில் இன்று நடைபெற்றது. மழை காரணமாக தாமதமாக தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா மற்றும் குசால் மெண்டிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து அதிரடியாக தொடங்கிய நிலையில் 11 ரன்களில் பதும் நிஷங்கா தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய குசால் பெரேரா 6 ரன்களுடன் பெவிலியன் திரும்ப, அணியின் மற்றொரு தொடக்க வீரரன குசால் மெண்டிஸூம் 19 ரன்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதனால் இலங்கை அணியானது 58 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

Advertisement

அதன்பின் இணைந்த கமிந்து மெண்டிஸ் மற்றும் கேப்டன் சரித் அசலங்கா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். ஒருகட்டத்திற்கு மேல் இருவரும் இணைந்து அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசித் தள்ள அணியின் ஸ்கோரும் மளமளவென உயரத்தொடங்கியது. இப்போட்டியில் அபாரமாக விளையாடி வந்த கமிந்து மெண்டிஸ் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது இரண்டாவது அரைசதத்தைப் பதிவுசெய்தார். இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 80 ரன்களை கடந்த நிலையில், 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 51 ரன்களைச் சேர்த்திருந்த கமிந்து மெண்டிஸ் ஆட்டமிழந்தார். 

அதேசமயம் மறுபக்கம் அபாரமாக விளையாடிவந்த சரித் அசலங்கா தனது 6ஆவது அரைசதத்தை கடந்து அசத்திய நிலையில், 9 பவுண்டரிகளுடன் 59 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து அதிரடியாக விளையாட முயன்ற பனுகா ரஜபக்ஷாவும் 17 ரன்களில் ஆட்டமிழக்க, இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களைக் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ரொமாரியோ ஷெப்பர்ட் 2 விக்கெட்டுகளயும், ஷமார் ஜோசப், அல்ஸாரி ஜோசப், குடகேஷ் மோட்டி, ஷமார் ஸ்பிரிங்கர் அகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். 

இதையடுத்து சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிராண்டன் கிங் - எவின் லூயிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் ஓவரில் இருந்தே பவுண்டரியும், சிக்ஸர்களையும் பறக்கவிட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இப்போட்டியில் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பிராண்டன் கிங் தனது 6ஆவது அரைசதத்தையும், எவின் லூயிஸ் தனது 10ஆவது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினர். மேற்கொண்டு இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 107 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்து அசத்தினர். 

அதன்பின் 5 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 50 ரன்களை எடுத்த கையோடு எவின் லூயிஸ் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஷாய் ஹோப்பும் 7 ரன்களுடன் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவர்களைத் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பிராண்டன் கிங்கும் 11 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 63 ரன்களை எடுத்த கையோடு பெவிலியன் திரும்பினார். அதன்பின் இணைந்த ரோஸ்டன் சேஸ் மற்றும் கேப்டன் ரோவ்மன் பாவெல் இணை நிதானமாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். பின்னர் 13 ரன்களில் ரோவ்மன் பாவெல் விக்கெட்டை இழந்தார்.

Advertisement

அவரைத்தொடர்ந்து 19 ரன்களைச் சேர்த்த நிலையில் ரோஸ்டன் சேஸும் விக்கெட்டை இழந்தார். இறுதியில் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 14 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 19.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றுள்ளது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய பிராண்டன் கிங் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News