மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்று முதல் இலங்கையில் தொடங்கியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது தம்புளாவில் உள்ள ரங்கிரி தம்புளா சர்வதேச மைதானம் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் குல் ஃபெரோசா - முனீபா அலி இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் குல் ஃபெரோசா 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 11 ரன்களை எடுத்த நிலையில் முனீபா அலியும் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் களமிறங்கிய சித்ரா அமீன் ஓரளவு தாக்குப்பிடித்து விளையாட, மறுமுனையில் களமிறங்கிய ஆலியா ரியாஸ் 6 ரன்களிலும், கேப்டன் நிதா தார் 8 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய சித்ரா அமீன் 25 ரன்கள் சேர்த்த நிலையில் அட்டமிழந்தார்.
அதைத்தொடர்ந்து இணைந்த டுபா ஹசன் - ஃபாத்திமா சனா இணை பொறுப்புடன் விளையாடியதுடன் தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளையும் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் டுபா ஹசன் 22 ரன்களில் விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஃபாதிமா சனா ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 22 ரன்களைச் சேர்த்தார். ஆனால் மறுபக்கம் களமிறங்கிய வீராங்கனைகள் யாரும் போதிய ரன்களைச் சேர்க்க தவறியதால் அந்த அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்திய அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளையும், ரேனுகா சிங், பூஜா வஸ்திரேகர் மற்றும் ஸ்ரெயங்கா பாட்டில் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி கலமிறங்கிய இந்திய மகளிர் அணிக்கு ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து தொடக்கம் முதலே அதிரடியாக விளையாட இந்திய அணி முதல் 6 ஓவர்களில் விக்கெட் ஏதும் இழக்காமல் 57 ரன்களைக் குவித்தது.
தொடர்ந்து இருவரும் அதிரடியாக விளையாட இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 85 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்து அசத்தினர். அதன்பின் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்மிருதி மந்தனா 9 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 40 ரன்கள் எடுத்திருந்த ஷஃபாலி வர்மாவும் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய தயாளன் ஹேமலதாவும் 15 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார்.
இருப்பினும் அடுத்து களமிறங்கிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோர் அணியை வெற்றியை நோக்கி அழைத்துச்சென்றனர். இதன்மூலம் இந்திய மகளிர் அணி 14.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் நடப்பு மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரையும் வெற்றியுடன் தொடங்கியுள்ளது.