நாங்கள் விளையாடிய விதம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது - ஹர்மன்ப்ரீத் கவுர்!
டபியூபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 213 ரன்களைச் சேர்த்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ஹீலி மேத்யூஸ் 10 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 77 ரன்களையும், நாட் ஸ்கைவர் பிரண்ட் 10 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 77 ரன்களையும், அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் 12 பந்தில் 2 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 36 ரன்களையும் சேர்த்தனர். குஜராத் ஜெயண்ட்ஸ் தரப்பில் அதிகபட்சமாக டேனியல் கிப்சன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன்பின் களமிறங்கிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை.
அந்த அணியில் அதிகபட்சமாக டேனியல் கிப்சன் 34 ரன்களையும், போப் லிட்ச்ஃபீல்ட் 31 ரன்களையும், பார்தி ஃபுல்மாலி 30 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் சோபிக்க தவற, அந்த அணி 19.2 ஓவர்களில் 166 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் ஜெயண்ட்ஸை அணியை வீழ்த்தியதுடன், இரண்டாவது முறையாக டபிள்யூபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய ஹர்மன்ப்ரீத் கவுர், “மிகவும் சிறப்பாக இருக்கிறது, இது ஒரு சிறந்த குழு முயற்சி, இன்று நாங்கள் விளையாடிய விதம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆட்டத்திற்கு முன்பு, நான் முதலில் பேட்டிங் செய்ய விரும்பினேன். ஆனால் பின்னர் நாங்கள் சேஸ் செய்ய முடிவு செய்தோம் - போர்டில் என்ன ஸ்கோர் இருந்தாலும், உங்கள் மீது நம்பிக்கையைக் காட்டினால் உங்களால் எந்த இலக்கையும் சேஸ் செய்ய முடியும். என்ன நடந்ததோ அது நல்லதாகவே நடந்தது.
ஹீலி மேத்யூஸும், நாட் ஸ்கைவர் பிரண்ட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் எங்களுக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக் கொடுத்தார்கள். அவர்கள் சிறந்த வீரர்கள், இந்த வகையான விளையாட்டுகளை எப்படி விளையாடுவது என்று அவர்களுக்குத் தெரியும். அதனால் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று நாங்கள் அவர்களுக்குச் சொல்லத் தேவையில்லை. அவர்கள் பொறுப்பேற்று அணிக்காக பேட்டிங் செய்த விதத்தில் மிகவும் மகிழ்ச்சி.
Also Read: Funding To Save Test Cricket
பந்துவீச்சைப் பொறுத்தவரை, இன்று நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். அனைத்து பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டனர், நாங்கள் செய்ய விரும்பிய விஷயங்கள் இவைதான். அடுத்த ஆட்டம் முக்கியமானது, நமக்கு என்ன நன்றாக நடந்தது என்பதை மீண்டும் உட்கார்ந்து சிந்திக்க வேண்டும். அணியில் உள்ள அனைவரும் அன்பானவர்கள். அதனால் அவர்கள் நிச்சயம் அதனை கேட்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.