உலக டெஸ்ட் சாம்பியன்ஷி 2025: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இறுதிப்போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 218 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

Advertisement

ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங்  செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த் அணியில் அதிகபட்சமாக பியூ வெப்ஸ்டார் 72 ரன்களையும், ஸ்டீவ் ஸ்மித் 66 ரன்களையும் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய காகிசோ ரபாடா 5 விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

Advertisement

இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 43 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில், இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் டெம்பா பவுமா - டேவிட் பெடிங்ஹாம் இணை அணியை சரிவிலிருந்து மீட்டனர். இதில் பவுமா 36 ரன்களை சேர்த்த நிலையில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து அரைசதத்தை நெருங்கிய டேவிட் பெடிங்ஹாமும் 45 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 138 ரன்களை மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய கேப்டன் பாட் கம்மின்ஸ் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் 74 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் பேட்டர்கள் மீண்டும் தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தனர். இதில் உஸ்மான் கவாஜா 6 ரன்களுக்கும், கேமரூன் க்ரீன் ரன்கள் ஏதுமின்றியும், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்னஸ் லபுஷாக்னே 22 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.

இதையடுத்து அணியின் நம்பிக்கை நட்சத்திரங்காள் ஸ்டீவ் ஸ்மித் 12 ரன்கள், டிராவிஸ் ஹெட் 9 ரன்கள், பியூ வெப்ஸ்டர் 9 ரன்கள், கேப்டன் பாட் கம்மின்ஸ் 6 ரன்கள் என வந்த வேகத்தில் நடையைக் கட்ட, ஆஸ்திரேலிய அணி 73 ரன்களில் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த அலெக்ஸ் கேரி - மிட்செல் ஸ்டார்க் இணை ஓரளவு தாக்குபிடித்ததுடன் 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு வலுவான முன்னிலையைக் கொடுத்தனர். அதன்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அலெக்ஸ் கேரி 5 பவுண்டரிகளுடன் 43 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.

இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதில் மிட்செல் ஸ்டார்க் 16 ரன்களுடனும், நாதன் லையன் ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் லுன்கி இங்கிடி மற்றும் காகிசோ ரபாடா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து 218 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

Advertisement

Also Read: LIVE Cricket Score

 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News