
ஆஸ்திரேலிய அண்டர்19 அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரில் இந்திய அண்டர் 19 அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி ஆஸ்திரேலியாவை ஒயிட்வாஷ் செய்து அசத்தியது.
இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்சமயம் நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அண்டர்19 அணி முதல் இன்னிங்ஸில் 293 ரன்களைக் குவித்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.
இதில் அதிகபட்சமாக ஐடன் ஓ கார்னர் 61 ரன்களையும், ரில்லெ கிங்ஸெல் 53 ரன்களையும் சேர்த்தனர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கி விளையாடி வரும் இந்திய அனிக்கு வைபவ் சூர்யவன்ஷி மற்றும் விஹான் மல்ஹோத்ரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் மல்ஹோத்ரா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில் மறுபக்கம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யவன்ஷில் 58 பந்துகளில் தனது சத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.