
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஜிம்பாப்வே அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு மஹ்முதுல் ஹசன் - ஷாத்மான் இஸ்லாம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் மஹ்முதுல் ஹசன் 14 ரன்களிலும், ஷாத்மான் இஸ்லாம் 12 ரன்னிலும் என விக்கெட்ட இழந்தார். பின்னர் இணைந்த மொமினுல் ஹக் மற்றும் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 60 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர்.
இதில் மொமினுல் ஹக் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். அதேசமயம் மறுபக்கம் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நஜ்முல் ஹொசைன் சாண்டோ 40 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து மொமினுல் ஹக்கும் 56 ரன்களுடன் நடையைக் கட்டினார். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் ஜக்கர் அலி 28 ரன்னிலும், ஹசன் மஹ்முத் 19 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதன் காரணமாக வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.