
வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது இன்று தொடங்கியது. அந்தவகையில் இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
இப்போட்டிக்கான இந்திய அணியில் வழக்கத்திற்கு மாறாக ஜஸ்பிரித் பும்ரா, ஆகாஷ் தீப் மற்றும் முகமது சிராஜ் என மூன்று வேகப்பந்து வீச்சாளர்களும், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா என இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடனும் களமிறங்கிவுள்ளது. இதனையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கபட்ட ரோஹித் சர்மா 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஹசன் மஹ்மூத் பந்துவீச்சில் நஜ்முல் ஹொசைன் சாண்டோவிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஷுப்மன் கில்லும் 8 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் ஹசன் மஹ்மூத் வீசிய மோசமான பந்தில் மோசமான ஷாட்டை விளையாடி விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸிடம் கேட்ச் கொடுத்து ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். இதனால் இந்திய அணி 28 ரன்களிலேயே 2 விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து களமிறங்கிய நட்சத்திர வீரர் விராட் கோலியும் 6 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஹசன் மஹ்மூதின் பந்துவீச்சில் லிட்டன் தாஸிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதனால் இந்திய அணி 34 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்தது.