
ENG vs IND, 1st Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக்கேப்டன் ரிஷப் பந்த் சதமடித்து அசத்திய நிலையில் 12 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 134 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் ப்போட்டியானது ஹெடிங்க்லேவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியில் கேஎல் ராகுல் 42 ரன்னிலும், சாய் சுதர்ஷன் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழந்த நிலையில், மற்றொரு தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதமடித்து அசத்தினார். அதன்பின் 16 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 101 ரன்களைச் சேர்த்த கையோடு யஷஸ்வி ஜெய்ஸ்வால் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் இணைந்த கேப்டன் ஷுப்மன் கில் - ரிஷப் பந்த் இணை அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஷுப்மன் கில் சதத்தைப் பூர்த்தி செய்தார். இதன்மூலம் இந்திய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 359 ரன்களைக் குவித்தது. இதனையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை கேப்டன் ஷுப்மன் கில் 127 ரன்களுடனும், துணைக்கேப்டன் ரிஷப் பந்த் 65 ரன்களுடனும் தொடர்ந்தனர். இன்றைய ஆட்டத்தின் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வந்த ரிஷப் பந்த் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 7ஆவது சதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார்.