
விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று, முதலில் பவுலிங் செய்தது. ஓபனிங் ஓவரை ஸ்டார்க் வீசினார். இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மீண்டும் ஒருமுறை இடதுகை வேகப்பந்து வீச்சாளருக்கு தடுமாறி ஆட்டமிழந்தனர். சுப்மன் கில்(0), ரோகித் சர்மா(13), சூரியகுமார் யாதவ்(0), கேஎல் ராகுல்(9) ஆகிய 4 பேரின் விக்கெட்டை முதல் 10 ஓவர்களுக்குள்ளேயே மிட்ச்சல் ஸ்டார்க் எடுத்தார்.
பின்னர் வந்த ஹர்திக் பாண்டியா 1 ரன்னுக்கும், நிலைத்து ஆடிவந்த விராட் கோலி 31 ரன்களுக்கும் ஆட்டமிழக்க 71 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இந்தியா இழந்தது. ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 16 ரன்களில் அவுட்டானார். 103 ரன்களுக்கு 9 விக்கெட்டுகள் விழுந்தது. அக்சர் பட்டேல்(29*) இறுதிவரை போராடிவர, சிராஜ் விக்கெட்டை தூக்கி ஸ்டார்க் ஆல் அவுட் செய்தார். 26 ஓவர்களுக்கு 117 ரன்கள் இந்திய அணி ஆல் அவுட் ஆனது. ஸ்டார்க் 5 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார்.
அதன்பின் 118 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா அணிக்கு டிராவிஸ் ஹெட், மிச்சல் மார்ஷ் இருவரும் பௌண்டரி மற்றும் சிக்ஸர்களாக விளாசி விரைவாக ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இருவரும் அரைசதம் கடந்தனர். பத்து ஓவர்களுக்கு இந்த ஜோடி 112 ரன்கள் சேர்த்தது. 11வது ஓவரில் 121 ரன்கள் அடித்து ஆட்டத்தையே முடித்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டிராவிஸ் ஹெட் 51 ரன்கள், மிட்ச்சல் மார்ஷ் 66 ரன்கள் அடித்திருந்தனர். 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்று 1-1 என சமன் செய்தது.