
நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியானது அபார வெற்றியைப் பதிவுசெய்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று கலேவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய அந்த அணியில் தொடகக் வீரர் பதும் நிஷங்கா ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் திமுத் கருணரத்னேவுடன் இணைந்த தினேஷ் சண்டிமால் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். இவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 124 ரன்களைச் சேர்த்து அசத்தினர்.
இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கருணரத்னே 46 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தினேஷ் சண்டிமால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 16ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின்னர் அவரும் 116 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் கமிந்து மெண்டிஸ் இணையும் அபாரமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினார்.