
ஆஃப்கானிஸ்தான் அணியானது தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள முதல் டெஸ்ட் போட்டியானது முடிவு எட்டப்படாமல் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து. இத்தொடரிலும் இரு அணியும் சமநிலையில் உள்ளன.
இதனையடுத்து ஜிம்பாப்வே - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான புத்தாண்டு டெஸ்ட் போட்டியானது இன்று (ஜனவரி 02) புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்றது. மழை காரணமாக இப்போட்டியின் டாஸ் நிகழ்வானது தாமதமானதுடன், முதல்நாள் உணவு இடைவேளையும் எடுக்கப்பட்டது. அதன்பின் தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணிக்கு அப்துல் மாலிக் மற்றும் ரியாஸ் ஹொசைன் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் ரியாஸ் ஹொசைன் 12 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் அப்துல் மாலிக் 17 ரன்களில் விக்கெட்டை இழக்க, கடந்த போட்டியில் இரட்டை சதமடித்த ரஹ்மத் ஷா மற்றும் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி இணை ஜோடி சேர்ந்தனர். இவர்கள் இருவர் மீதும் பெரும் எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில் ஹஸ்மதுல்லா ஷாஹிதி 13 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் 19 ரன்களை எடுத்திருந்த ரஹ்மத் ஷாவும் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய அஃப்சர் ஸஸாய், ஷாஹிதுல்லா, இஸ்மத் அலாம் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.