எங்களுடைய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள் - ரோஹித் சர்மா பாராட்டு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் எங்களுடைய பந்துவீச்சாளர் சிறப்பாக செயல்பட்டனர் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பையை தொடர்ந்து நான்காவது முறையாக இந்தியா கைப்பற்றி இருக்கிறது. தொடரை இந்திய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இனி அடுத்த இரண்டு போட்டிகளில் இழந்தாலும் தொடர் சமனில் தான் முடியும். அப்படி நடக்கும் பட்சத்தில் யார் நடப்பு சாம்பியனோ அவர்கள் கோப்பையை கைப்பற்றியதாக அறிவிக்கப்படுவார்கள்.
இந்த நிலையில் இந்திய அணி டெல்லி டெஸ்ட் போட்டியில் தோல்வியை நோக்கி சென்ற நிலையில் ஒரு மணி நேரத்தில் அனைத்தையும் இந்திய வீரர்கள் மாற்றி வெற்றி பெற்றனர். இது குறித்து ரோகித் சர்மாவிடம் ஆஸ்திரேலியாவை எப்படி வீழ்த்தினீர்கள் என்று கேட்கப்பட்டது.
Trending
அதற்கு பதில் அளித்த அவர், “இந்த முடிவு நிச்சயம் சிறப்பானது ஆகும். நேற்று நீங்கள் போட்டியை பார்த்தீர்கள் என்றால் நாங்கள் ஆட்டத்தில் பின்னோக்கி இருந்தோம். ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் எங்கள் வீரர்கள் தங்களது பணியை சிறப்பாக செய்து போட்டியின் முடிவையே மாற்றிவிட்டனர். நாங்கள் வெறும் ஒரு ரன் தான் பின் தங்கியிருந்தோம்.
இதுவே அதிக ரன்கள் பின்தங்கி இருந்தால் கடைசி இன்னிங்சில் பேட்டிங் செய்யும்போது மிகவும் கடினமாக இருந்திருக்கும். ஆனால் எங்களுடைய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். இன்று ஒரு மணி நேரத்தில் 9 விக்கெட்டுகளை அவர்கள் வீழ்த்தியது பாராட்டக் கூடியது. இதேபோன்று கடைசி இன்னிங்ஸிலும் எங்களுடைய பேட்ஸ்மேன்கள் தங்களுடைய பணியை சரியாக செய்தார்கள். இதுபோன்ற ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் வித்தியாசமாக விளையாட வேண்டும்.
ஆஸ்திரேலிய வீரர்கள் இன்று அதிரடியாக விளையாடுவார்கள் என்று எங்களுக்கு தெரியும். அதற்கு ஏற்றார் போல் நாங்கள் எங்களை தயார்படுத்திக் கொண்டோம். இன்று ஆஸ்திரேலியா எவ்வளவு ரன்கள் அடித்தாலும் நாம் பதற்றப்படக்கூடாது என்ற முடிவில் இருந்தோம். ஆஸ்திரேலிய வீரர்கள் ஏதேனும் தவறு செய்வார்கள் என்று நாங்கள் காத்துக் கொண்டிருந்தோம். அதேபோல் ஆஸ்திரேலிய வீரர்கள் தவறான ஷாட்டுகளை ஆடி விக்கெட்டுகளை இழந்தனர்.
அதனை நாங்கள் பயன்படுத்திக் கொண்டோம். இந்த ஆடுகளத்தில் தற்போது உள்ள கால சூழ்நிலையில் கொஞ்சம் ஈரப்பதம் இருக்கிறது. அது முதல் இன்னிங்ஸில் பந்துவீச்சாளர்களுக்கு கைகொடுக்கும் என்று எனக்கு தெரியும். நேரம் போக போக பேட்டிங்கிற்கு சாதகமாக ஆடுகளம் மாறுகிறது. அதனால் காலை நேரத்தில் இந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என நாங்கள் நினைத்தோம். அஸ்வின் ஜடேஜா போன்றோர் போட்டியை தலைகீழாக மாற்றி விட்டார்கள். அவர்களெல்லாம் மாஸ்டர்களாக இருக்கிறார்கள்.
இந்த நான்கு இன்னிங்ஸில் பல விஷயங்கள் எங்களுக்கு சாதகமாக அமைந்தது. குறிப்பாக ஜடேஜாவும் விராட் கோலியும் பேட்டிங் செய்ததும் அக்சர் பட்டேல் அஸ்வின் பார்ட்னர்ஷிப் அமைத்ததும் பிரமிக்கும் வகையில் இருந்தது. இந்த பார்ட்னர்ஷிப் தான் எங்களுக்கு வெற்றி பெற வாய்ப்பாக கிடைத்தது” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now