
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததுடன் 180 ரன்களில் அல் அவுட்டானது. இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலியா அணி 337 ரன்களை குவித்தது.
அதன்பின் 157 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்தியா அணியில் நிதீஷ் ரெட்டி 42 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத் தவிர்த்து வேறெந்த வீரரும் ரன்களைச் சேர்க்கவில்லை. இதனால் இந்திய அணி 175 ரன்களில் ஆல் அவுட்டானதுடன், ஆஸ்திரேலிய அணிக்கு 19 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. அதன்படி இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணி பத்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணியானது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டியில் சதமடித்து அசத்திய டிராவிஸ் ஹெட் இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதினை வென்றார். இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வருகிற டிசம்ப 14 ஆம் தேதி பிரிஸ்பேனில் நடைபெறவுள்ளது.