
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி 5 போட்டிகளை உள்ளடக்கிய பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளன.
இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது பிரிஸ்பேனில் உள்ள காபா கிரிக்கெட் மைதானத்தில் டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கிய நிலையில், இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்களைக் குவித்து அசத்தியது.
இதில் அதிகபட்சாமாக டிராவிஸ் ஹெட் 152 ரன்களையும், ஸ்டீவ் ஸ்மித் 101 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஜஸ்பிரித் பும்ரா ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு இம்முறையும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்னிலும், ஷுப்மன் கில் ஒரு ரன்னிலும், விராட் கோலி 3 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பந்தும் 9 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.