3rd Test, Day 4: சதத்தை தவறவிட்ட ஷுப்மன் கில்; வலிமையான முன்னிலையில் இந்தியா!
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 440 ரன்கள் முன்னிலைப் பெற்று வலிமையான நிலையில் உள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளை இழந்தாலும், 445 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 131 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 112 ரன்களையும் எடுத்தனர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் அபாரமான தொடக்கத்தை கொடுத்ததுடன் சதமடித்தும் அசத்தினார். இப்போட்டியில் பென் டக்கெட் 153 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் இங்கிலாந்து அணி 319 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.
Trending
இதன்மூலம் 126 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் 19 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் இணைந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ஷுப்மன் கில் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது மூன்றாவது சதத்தைப் பதிவுசெய்தார்.
அதன்பின் 9 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 104 ரன்கள் எடுத்த நிலையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் காயம் காரணமாக ரிட்டையர்ட் ஹைர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார். இதனால் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்களைச் சேர்த்தது. இதனைத்தொடர்ந்து இன்று தொடங்கிய நான்காம் நாள் ஆட்டத்தை ஷுப்மன் கில் 65 ரன்களுடனும், குல்தீப் யாதவ் 03 ரன்களுடனும் தொடந்தனர்.
இதில் தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷுப்மன் கில் இப்போட்டியிலும் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 9 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 91 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டாகி சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத்தொடர்ந்து 27 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவும் ஆட்டமிழந்தார்.
அதன்பின் மீண்டும் களத்திற்கு வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் அறிமுக வீரர் சர்ஃப்ராஸ் கானும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஜெய்ஸ்வால் 149 ரன்களுடனும், சர்ஃப்ராஸ் கான் 22 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
Win Big, Make Your Cricket Tales Now