
ஜிம்பாப்வே - இந்திய அணிகளுக்கு இடையேயான 4ஆவது டி20 போட்டியானது இன்று ஹராரேவில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை மட்டுமே சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் சிக்கந்தர் ரஸா 46 ரன்களைச் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் கலீல் அஹ்மத் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வல் 13 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 93 ரன்களையும், கேப்டன் ஷுப்மன் கில் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 58 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இந்திய அணி 15.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இப்போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இப்போட்டிக்கு பின் பேசிய ஜெய்ஸ்வால், “இன்று எனது பேட்டிங்கை நான் மிகவும் ரசித்தேன். வெவ்வேறு பந்துவீச்சாளர்களுக்கான எனது திட்டங்களை வைத்திருந்தேன். பந்து புதியதாக இருக்கும் போது அது பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. அதேசமயம் பழையதாக ஆக, அது மிகவும் பிட்ச் மெதுவாக இருந்தது. மேலும் ஷுப்மன் கில்லுடன் இணைந்து பேட்டிங் செய்வதை நான் மிகவும் ரசித்தேன்.