
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மெல்பொர்னில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி ஸ்டீவ் ஸ்மித்தின் சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 474 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்களைச் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணியின் டாப் ஆர்டரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 82 ரன்களையும், விராட் கோலி 36 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர. பின் நிதீஷ் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் இணை அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். இதில் அரைசதம் கடந்து அசத்திய வாஷிங்டன் சுந்தர் 50 ரன்களுடன் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அபாரமாக விளையாடி வந்த நிதீஷ் ரெட்டி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதனால் இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 358 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து இன்று நான்காம் நாள் ஆட்டமானது அரைமணி நேர முன்கூட்டியே தொடங்கியது. அதன்படி தொடங்கிய நான்காம் நாள் ஆட்டத்தை நிதீஷ் ரெட்டி 105 ரன்களுடனும், முகமது சிராஜ் 2 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் அதிரடியாக விளையாட முயன்ற நிதீஷ் ரெட்டி 114 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 369 ரன்களில் ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்காட் போலண்ட், பாட் கம்மின்ஸ் மற்றும் நாதன் லையன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.