
இந்திய - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது . இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி 480 களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸ் ஆடிய இந்தியா மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 289 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தது.
இன்று நான்காம் நாள் ஆட்டத்தை துவங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி அளிக்கும் விதமாக ரவீந்திர ஜடேஜா 28 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதனால் இந்தியா 309 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதனைத் தொடர்ந்து கோலியுடன் ஜோடி சேர்ந்தார் கே.எஸ் பரத். இருவரும் உணவு இடைவேளை வரை நிதானமான ஆட்டத்தை கடைப்பிடித்தனர். உணவு இடைவேளைக்குப்பின் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய கே.எஸ் பரத் 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில் லியான் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். அப்போது இந்திய அணி 393 ரன்களை எடுத்து இருந்தது.
விராட் கோலி மற்றும் கே எஸ் பரத் ஆகியோர் இணைந்து ஐந்தாவது விக்கெட்டுக்கு 89 ரன்கள் சேர்த்திருந்தனர். இதனைத் தொடர்ந்து களத்திற்கு வந்தார் ஆல் ரவுண்டர் அக்சர் பட்டேல். இவர் விராட் கோலியுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி வேகமான ரன் குவிப்பிலும் ஈடுபட்டது. இந்த டெஸ்ட் போட்டியில் விராட் கோலி தனது 28ஆவது சதத்தை பதிவு செய்தார் . சர்வதேச போட்டிகளில் அவர் அடிக்கும் 75 ஆவது சதம் இதுவாகும்.