
இந்தியா- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 480 ரன்கள் குவிக்க, இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் கில் சதம் அடித்து இருந்தாலும், யாராவது ஒருவர் நின்று ஆஸ்திரேலியா அணியின் ஸ்கோரை சமன் செய்யும் பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டிய தேவை இருந்தது.
அந்தப் பொறுப்பை எடுத்துக் கொண்ட விராட் கோலி கடைசி வரை நின்று இந்திய அணி 91 ரன்கள் முன்னிலை பெறும் அளவுக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆட்டம் யாருக்கும் வெற்றி தோல்வி இல்லாமல் முடிய இந்திய அணி தொடரை இரண்டுக்கு ஒன்று என கைப்பற்றியது. ஆட்டநாயகன் விருதை விராட் கோலி பெற்றார்.
ஆட்ட நாயகன் விருதைப் பெற்ற விராட் கோலி பேசுகையில், “உண்மையைச் சொல்வது என்றால் ஒரு வீரராக என் மீது இருக்கும் எதிர்பார்ப்புகள் எனக்கு முக்கியம். நாக்பூர் முதல் இன்னிங்சில் இருந்து நான் நன்றாக பேட்டிங் செய்வதாக உணர்ந்தேன். நீண்ட நேரம் பேட்டிங் செய்வதில் கவனம் செலுத்தினோம். நான் அதை ஓரளவுக்கு செய்தேன். ஆனால் கடந்த காலத்தில் நான் செய்த அளவுக்கு கிடையாது. இதைப் பொறுத்தவரையில் எனக்கு ஏமாற்றம்தான்.