
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளை இந்திய அணியும், மூன்றாவது டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்றது. அகமதாபாத்தில் நடந்த நான்காவது டெஸ்ட் போட்டி இரு அணிகளின் சிறப்பான பேட்டிங்கால் டிராவில் முடிவடைந்தது. இறுதியில் 2-1 என்ற கணக்கில் கோப்பையை இந்திய அணி கைப்பற்றியது.
4 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் 25 விக்கெட்டுகள் மற்றும் 86 ரன்கள், ரவீந்திர ஜடேஜா 22 விக்கெட்டுகள் மற்றும் 135 ரன்கள் என பேட்டிங் பவுலிங் இரண்டிலும் அபாரமாக செயல்பட்டனர். இந்திய அணியின் மற்றொரு ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல் பந்துவீச்சில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றி இருந்தாலும், பேட்டிங்கில் மூன்று அரைசதங்கள் உட்பட 264 ரன்கள் விளாசினார்.
நாக்பூர் மற்றும் டெல்லி மைதானங்களில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வைப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர்கள் இவர்கள் மூவருமே ஆவர். இந்தூர் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஜடேஜா-அஸ்வின் ஸ்பின் ஜோடியின் பங்களிப்பு இன்றியமையாததாக இருந்தது. ஒட்டுமொத்தமாக பேட்டிங்கில் சோதப்பிய காரணத்தினால் 3ஆவது போட்டியில் இந்திய அணி தோற்றது.