
இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது ஹராரேவில் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் நடைபெற்ற முதல் நான்கு டி20 போட்டிகளில் முடிவில் இந்திய அணி மூன்றில் வெற்றிபெற்று 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சஞ்சு சாம்சனின் அதிரடியான அரைசதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களைச் சேர்த்தது.
இதனையடுத்து 168 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் தியான் மேயர்ஸ் 34 ரன்களை அடித்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் சோபிக்கவில்லை. இதனால் ஜிம்பாப்வே அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் முகேஷ் குமார் 4 விக்கெட்டும் சிவம் துபே 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் இந்திய அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய ஜிம்பாப்வே அணி கேப்டன் சிக்கந்தர் ரஸா, “இந்த தொடரில் எங்களது அணியின் சார்பாக வேகப்பந்து வீச்சாளரான பிளெஸிங் முஸரபாணி மிகச்சிறப்பாக செயல்பட்டிருந்தார். ஆனாலும் நாங்கள் பேட்டிங் மற்றும் ஃபீல்டிங்கில் இந்த தொடர் முழுவதுமே சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தினோம். அதுவே நாங்கள் இந்த தொடரை இழக்க முக்கிய காரணமாக அமைந்தது. மேற்கொண்டு நாங்கள் ஒரு அணியாக ஃபீல்டிங்கில் முன்னேற்ற வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. அவற்றை நாங்கள் சரிசெய்தாக வேண்டும்.