
இந்திய அணியின் மிகப்பெரிய தூணாக இருந்து வருபவர் ஜஸ்பிரித் பும்ரா தான். ஆனால் கடந்த சில மாதங்களாக அவர் இந்திய அணியில் விளையாடுவதே இல்லை. அவர் எங்கு சென்றார் என்ற கேள்விகள் கூட மறைந்துவிட்டன. முதுகில் ஏற்பட்ட காயத்தால் கடந்தாண்டு ஜூலை மாதத்தின் போது பெங்களூரு என்சிஏவுக்கு சென்ற அவர், அதன்பின்னர் செப்டம்பரில் ஆஸ்திரேலிய தொடருக்கு வந்தார். எனினும் உடனடியாக அவரின் ஃபிட்னஸ் சரியாக இல்லையென கூறி அனுப்பிவிட்டனர்.
சுமார் 6 மாத காலமாக ஓய்விலேயே இருந்து வரும் ஜஸ்பிரித் பும்ரா தற்போது நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பை மூலமாக மீண்டும் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிலும் ஏமாற்றமே மிஞ்சியது. ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் அவரின் பெயர் இடம் பெறவில்லை. இன்னும் அதிகாரிகளிடம் இருந்து அனுமதி சான்றிதழ் கிடைக்காததால் பெயர் சேர்க்கப்படவில்லை எனக்கூறப்பட்டது.
இதன் மூலம் ஜஸ்பிரித் பும்ரா நேரடியாக ஐபிஎல் தொடருக்கு தான் வருவார் என்பது உறுதியாகியுள்ளது. ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 31ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. தேசத்திற்காக விளையாட தயாராக இல்லை எனக்கூறும் பும்ரா, அதிக பணம் கொட்டும் ஐபிஎல்-க்கு மட்டும் தயாராகிவிடுவார் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.