ரோஹித் சர்மாவின் டெஸ்ட் எதிர்காலம் கேள்விகுறிதான் - ஆகாஷ் சோப்ரா!
ரோஹித் சர்மாவின் எதிர்காலம் இந்த கிரிக்கெட் வடிவத்தில் இப்படியே இருக்குமா என்பதில் எனக்கு 100 சதவீதம் நம்பிக்கை கிடையாது என முன்னால் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
விராட் கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதை அடுத்து, இந்திய அணியின் மூன்று வடிவ கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். தற்பொழுது அவர் டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தில் இரண்டு உலகக் கோப்பைகளை சந்தித்து இரண்டிலும் தோல்வி அடைந்து இருக்கிறார். இதனால் அவரது கிரிக்கெட் எதிர்காலம் எப்படி இருக்கும்? என்று விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் அக்டோபர் நவம்பர் மாதங்களில் நடக்க இருக்கும் ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுகிறது. இதில் ரோஹித் சர்மா அடுத்து கேப்டனாக சந்திக்க உள்ள உலகக்கோப்பை ஒருநாள் உலகக்கோப்பைதான் இருக்கிறது.
Trending
இதனால் மற்ற வடிவங்களில் அவர் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கேப்டனாக இருக்க வேண்டுமா? மேலும் ஒரு வீரராகவும் இருக்க வேண்டுமா? என்பதெல்லாம் கேள்வியாக இருக்கிறது. மேலும் அவரது வயதும் உடல் தகுதியும் முக்கியமான காரணிகளாகப் பார்க்கப்படுகிறது.
தற்பொழுது இதுகுறித்து பேசியுள்ள ஆகாஷ் சோப்ரா, “ரோஹித் சர்மா நல்ல கேப்டன் மற்றும் நல்ல டெஸ்ட் பேட்ஸ்மேன் என்பதில் எந்தச் சந்தேகமும் கிடையாது. ஆனால் அவரது எதிர்காலம் இந்த கிரிக்கெட் வடிவத்தில் இப்படியே இருக்குமா என்பதில் எனக்கு 100% நம்பிக்கை கிடையாது. ஏனென்றால் கடந்த இரண்டு முறை உலகக்கோப்பைக்கு சென்று தோல்வியைச் சந்தித்தாகிவிட்டது.
அவருடைய வயதும் அவருக்குச் சாதகமாக இல்லை என்பது தான் உண்மை. ரோஹித் சர்மா அடுத்த இரண்டு வருடங்களுக்கு நடைபெற இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளுக்கு விளையாட நினைத்தால் விளையாடலாம். அதில் மொத்தம் ஆறு தொடர்கள் இருக்கிறது.
அதேசமயத்தில் கடந்த காலங்களில் ரோஹித் சர்மா நிறைய ஆட்டங்களைக் காயங்களால் தவற விட்டதை நாம் பார்த்தோம். முன்பு போலவே ரோஹித் சர்மா காயங்களால் ஓய்வெடுக்க அனுமதிக்கப்படுவார் என்பது நிச்சயம் கிடையாது. இப்படி இருக்கும் பொழுது மூன்று வடிவங்களில் ரோஹித் சர்மா விளையாட விரும்பினால் அது நடக்கின்ற காரியம் கிடையாது” என்று கூறியிருக்கிறார்.
Win Big, Make Your Cricket Tales Now