கேப்டன் பதவிக்கு ரிஷப் பந்த் சரியானவராக இருக்கலாம் - ஆகாஷ் சோப்ரா
வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் தடுமாறினாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 24 காரட் தங்கம் போல செயல்பட்டு வரும் ரிஷப் பந்த் கேப்டன் பொறுப்புக்கு தகுதியானவர் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் மற்றும் ஆஸ்திரேலிய டி20 தொடரை முடித்துள்ள இந்தியா அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அதில் முதலாவதாக நடைபெறும் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா ஓய்வெடுப்பதால் சூர்யகுமார் யாதவ் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் இந்தியாவை கேப்டனாக வழி நடத்த உள்ளனர்.
அதை தொடர்ந்து 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை அங்கமாக நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது. முன்னதாக 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றதன் காரணமாக இந்தியாவின் கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா கடந்த 2 வருடத்தில் எந்த ஐசிசி உலகக் கோப்பையையும் வெல்லவில்லை.
Trending
அதனால் அவருக்கு அடுத்தபடியாக இந்தியாவை வழி நடத்தப் போகும் கேப்டனை உருவாக்குவதற்கான வேலைகளை பிசிசிஐ தொடங்கியுள்ளது. சொல்லப்போனால் தற்போதைய நிலைமையில் ஹர்திக் பாண்டியா டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவின் அடுத்த கேப்டனாக நியமிப்பதற்கான வேலைகளை ஏற்கனவே பிசிசிஐ கையில் எடுத்துள்ளது. அதே போல 2022இல் இங்கிலாந்துக்கு எதிராக ரத்து செய்யப்பட்ட 5ஆவது போட்டியில் கேப்டனாக செயல்பட்ட பும்ரா வருங்காலத்தில் டெஸ்ட் கேப்டனாக இருப்பார் என்று நம்பப்படுகிறது.
இருப்பினும் வேகப்பந்து வீச்சாளராக இருப்பதால் அடிக்கடி காயத்தை சந்திக்க கூடிய அவரை விட ரிஷப் பந்த் இந்தியாவின் அடுத்த டெஸ்ட் கேப்டனாக இருப்பதற்கு தகுதியானவர் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். குறிப்பாக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் தடுமாறினாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 24 காரட் தங்கம் போல செயல்பட்டு வரும் ரிஷப் பந்த் அந்த பொறுப்புக்கு தகுதியானவர் என்று தெரிவித்துள்ளார்.
இதுபற்றி பேசிய அவர், “மிகவும் நீண்ட கால பார்வையில் ஷுப்மன் கில் சரியானவராக இருப்பார். ஆனால் தற்போதைக்கு அவர் டெஸ்ட் கேப்டனாக பொருந்த மாட்டார். எனவே சமீப கால எதிர்காலத்தைப் பற்றி பேசும் போது அந்த பதவிக்கு ரிஷப் பந்த் சரியானவராக இருக்கலாம். ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிசப் பண்ட் 24 காரட் தங்கம். எனவே அவரும் டெஸ்ட் கேப்டன்ஷிப் பதவிக்கு போட்டியிடும் வீரர்களில் ஒருவராக இருப்பார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் கேம் சேஞ்சராக இருக்கிறார். எனவே ரோகித் சர்மா விடை பெற்றால் இந்த இருவரில் ஒருவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் அடுத்த கேப்டனாக நியமிக்கலாம்” என்று கூறியுள்ளார். அவர் கூறுவது போல ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியை மிஞ்சி நிறைய சாதனைகளை படைத்துள்ள ரிஷப் பந்த் வருங்காலங்களில் கேப்டனாகவும் அசத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now