
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று மும்பையில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி இலங்கையை வெறும் 55 ரன்களுக்கு சுருட்டி 302 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. மேலும் இத்தொடரில் முதல் 4 போட்டிகளில் பெஞ்சில் அமர்ந்திருந்த முகமது ஷமி காயமடைந்த பாண்டியாவுக்கு பதிலாக வாய்ப்பு பெற்று நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை ஆகிய கிரிக்கெட் அணிகளுக்கு எதிரான 3 போட்டிகளில் மட்டும் 14 விக்கெட்டுகளை கொத்தாக எடுத்துள்ளார்.
அவரைப் பார்த்து பும்ரா, சிராஜூம் உத்வேகமடைந்து நல்ல லைன், லென்த்தை பின்பற்றி புதிய பந்தை எதிரணி பேட்ஸ்மேன்கள் தொட முடியாத அளவுக்கு ஸ்விங் செய்து மிரட்டி வருகிறார்கள். அதனால் தற்போது இந்தியாவின் பவுலிங் அட்டாக் இறக்கமற்றதாகவும் உலகத்தரம் வாய்ந்ததாகவும் முன்னேறியுள்ளதாக வாசிம் அக்ரம், சோயப் அக்தர் போன்ற பாகிஸ்தான் ஜாம்பவான் வீரர்களே வெளிப்படையாக பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியா வேண்டுமென்றே வெல்வதற்காக ஐசிசியே வித்தியாசமான புதிய பந்துகளை இந்திய பவுலர்களிடம் கொடுப்பதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஹசன் ராசா வினோதமாக விமர்சித்துள்ளார். அதாவது மற்ற அணிகளை காட்டிலும் அதிகமாக ஸ்விங் கிடைப்பதற்காக இந்திய பவுலர்களுக்கு பிரத்தியேகமான புதிய பந்துகள் கொடுக்கப்படுவதாக விமர்சிக்கும் அவர் இது பற்றி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.