விராட் கோலிக்கு சரியான மாற்று வீரர் சட்டேஷ்வர் புஜாரா தான் - ஆகாஷ் சோப்ரா!
விராட் கோலிக்கு மாற்று வீரராக சட்டேஷ்வர் புஜாரா சிறந்த தேர்வாக இருப்பார். ஆனால் இந்திய அணியின் தேர்வாளர்கள் அப்படி சிந்திக்கிறார்களா? என்ற கேள்வியை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா எழுப்பியுள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இம்மாதம் முதல் தொடங்கவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 25ஆம் தேதி ஹைதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக இத்தொடர் நடைபெறவுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இதையடுத்து இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் நேற்றைய தினம் ஹைத்ராபாத்திற்கு சென்று தங்களது பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கெதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த நட்சத்திர வீரர் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களினால் விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
Trending
இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து தனிப்பட்ட காரணங்களினால் விராட் கோலி விலகியுள்ளார். மேலும், விராட் கோலியின் தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறும் அவரது தனிப்பட்ட காரணங்களின் தன்மை குறித்து ஊகங்களைத் தவிர்க்குமாறும் ஊடகங்கள் மற்றும் ரசிகர்களை பிசிசிஐ கேட்டுக்கொள்கிறது” என குறிப்பிட்டிருந்தது. மேலும் அவருக்கான மாற்று வீரரையும் பிசிசிஐ அறிவிக்கவில்லை.
இதனால் விராட் கோலிக்கு மாற்று வீரராக யார் அணியில் சேர்க்கப்படுவார் என்ற எதிபார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், விராட் கோலியில் இடத்தில் உள்ளூர் போட்டிகளில் அசத்திவரும் சட்டேஷ்வர் புஜாரா களமிறங்கினால் சரியாக இருக்கும் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “சட்டேஷ்வர் புஜாரா - முதல் தர கிரிக்கெட்டில் 20ஆயிரம் ரன்களைக் கடந்த நான்காவது வீரர். மேலும் சமீபத்தில் தனது இரட்டை சதத்தையும் பதிவுசெய்துள்ளார். அவரது ஃபார்ம் எப்பது உள்ளது என்பதை அவருடைய சமீபத்திய சாதனைகளே பேசும். அவர் கவுண்டி கிரிக்கெட்டில் இணைந்து தன்னை தீவிரமாக தயார்படுத்தி வைத்துள்ளார். இதனால் விராட் கோலிக்கு மாற்றாக புஜாராவை நிச்சயம் தேர்வு செய்யலாம்.
ஆனால் இந்திய அணியைப் பொறுத்தவரையில் அவர்களிடம் வேறு திட்டம் உள்ளது என நினைக்கிறேன். அவர்கள் ஏற்கெனவே விராட் கோலிக்கான மாற்று வீரரை தேர்ந்தெடுத்து விட்டார்கள் என நம்புகிறேன். என்னை கேட்டால் சட்டேஷ்வர் புஜாரா சிறந்த தேர்வாக இருப்பார். ஆனால் இந்திய அணியின் தேர்வாளர்கள் அப்படி சிந்திக்கிறார்களா? அந்த ஒரு கேள்வியைத் தான் நாம் கேட்கவேண்டும்” என தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now