டி20 உலகக்கோப்பை 2024: ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனை கணித்த ஆரோன் ஃபிஞ்ச்!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் குறித்த தனது கணிப்பை அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டு ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரானது வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இதில், எந்த அணி கோப்பையை வென்று சாம்பியன் பட்டம் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தொடரின் முதல் போட்டியில் தொடரை நடத்தும் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்நிலையில் இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்த வரிசையில் ஆஸ்திரேலிய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக டி20 தொடரில் விளையாடவுள்ளது. மேலும் சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் சாம்பின் பட்டத்தை வென்றுள்ள ஆஸ்திரெலிய அணி அதே உத்வேகத்துடன் டி20 உலகக்கோப்பையையும் வெல்லும் முனைப்பில் உள்ளது.
Trending
இந்நிலையில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனை அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் கணித்துள்ளார். அவரது கணிப்பின் படி, அணியின் தொடக்க வீரர்கள் இடத்தை டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட்டிற்கு வழங்கியுள்ளார். அதன்பின் அடுத்தடுத்த இடங்களில் கேப்டன் மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோருக்கு இடமளித்துள்ளார்.
இதில் ஆச்சரியப்படும் வகையில் ஸ்டீவ் ஸ்மித்திற்கு இடம் கொடுக்காமல், ஜோஷ் இங்கிலிஸுக்கு ஆரோன் ஃபிஞ்ச் தனது பிளேயிங் லெவனில் இடம் கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், எனது பிளேயிங் லெவனில் ஸ்டீவ் ஸ்மித்திற்கு இடமில்லை. ஏனெனில் எனது தேர்வில் அணிக்கு போதுமான பேட்டர்கள் உள்ளனர். டி20 கிரிக்கெட்டில் ஸ்மித்தை விட ஜோஷ் இங்க்லிஸ் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அதனால் அவர் தான் நிச்சயம் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார்” என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், வெஸ்ட் இண்டீஸ் உள்ள ஆடுகளங்கள் சுழலுக்கு சாதகமாக இருக்கும். அதன் காரணமாக தேவைக்கேற்றவாறு மார்கஸ் ஸ்டொய்னிஸ் அல்லது மேத்யூ ஷார்ட் ஆகியோருக்கு நான் வாய்ப்பு கொடுப்பேன்” என்று தெரிவித்துள்ளார். இதுதவிர்த்து அவரது பிளேயிங் லெவனில் டிம் டேவிட்டிற்கு வாய்ப்பு வழங்கியுள்ளார். அதன்பின் பந்துவீச்சாளர்களில் பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹசில்வுட் மற்றும் ஆடம் ஸாம்பாவும் இடம்பிடித்துள்ளனர்.
ஆரோன் ஃபிஞ்ச் தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன்: டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ், மார்கஸ் ஸ்டொய்னிஸ்/மேத்யூ ஷார்ட், டிம் டேவிட், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா மற்றும் ஜோஷ் ஹேசில்வுட்.
Win Big, Make Your Cricket Tales Now