
தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் வரலாற்றின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக போற்றப்படுகிறார். கடந்த 2004ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் ஆரம்ப காலங்களில் சாதாரண வீரர்களில் ஒருவராகவே வலம் வந்தார். ஆனால் வருடங்கள் செல்லச் செல்ல அனுபவத்தால் தன்னை வளர்த்து டி20 கிரிக்கெட்டில் எப்படி பந்து வீசினாலும் அதை மைதானத்தில் நாலாபுறங்களிலும் கற்பனை செய்ய முடியாத ஷாட்டுகளால் உருண்டு புரண்டு சுழன்றடித்து சிக்ஸர்களாக பறக்க விட்ட அவர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று அனைவரும் அழைக்கும் அளவுக்கு புதிய பரிணாமத்தை ஏற்படுத்தினார்.
அதே போல் ஒருநாள் கிரிக்கெட்டில் வெறும் 31 பந்துகளில் அதிவேக சதமடித்த வீரராக மாபெரும் உலக சாதனை படைத்த அவர் 2012இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 220 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 33 ரன்களை எடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அசத்தினார். அந்த வகையில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் ஆல் இன் ஆல் முழுமையான பேட்ஸ்மேனாக செயல்பட்டு தனக்கென்று தனித்துவமான தரத்தை உருவாக்கிய அவர் சர்வதேச அளவில் 19,000க்கும் மேற்பட்ட ரன்களையும் 47 சதங்களையும் அடித்துள்ளார்.
மேலும் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியில் சிறப்பாக செயல்பட்ட அவருக்கு எதிராக பந்து வீசுவது என்றாலே பெரும்பாலான பவுலர்கள் தயங்குவார்கள் என்று சொல்லலாம். ஆனால் ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் ஷேன் வார்னே, இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா, ஆஃப்கானிஸ்தானின் ரஷித் கான் ஆகியோர் தம்முடைய கேரியரில் எதிர்கொள்வதற்கு மிகவும் சிரமப்பட்டதாக பாராட்டியுள்ள ஏபி டீ வில்லியர்ஸ் தனது சமீபத்திய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.