ஆஃப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து முன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி இரண்டிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் இன்றைய தினம் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி ஹராரேவில் இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் - இப்ராஹிம் ஸத்ரான் இனை அதிரடியான தொடக்கத்தை வழங்கினர். இதில் இருவரும் தங்களுடைய அரைசதங்களைப் பதிவு செய்து அசத்தியதுடன், முதல் விக்கெட்டிற்கு 159 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். இதில் சதத்தை நெருங்கிய குர்பாஸ் 8 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என 92 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அவரைத் தொடர்ந்து 7 பவுண்டரிகளுடன் 60 ரன்களை எடுத்திருந்த ஸத்ரானும், அடுத்து வந்த சஹிதுல்லா 10 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். அதேசமயம் இந்த இன்னிங்ஸில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த செதிகுல்லா அடல் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 35 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார்.