
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகள் ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றன. இதில் நடைபெற்ற முடிந்த டெஸ்ட் போட்டியின் முடிவில் அயர்லாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களது முதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மார்ச் 7ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. மேலும் இந்த ஒருநாள் தொடரின் அனைத்து போட்டிகளும் ஷார்ஜாவிலுள்ள சார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான ஆஃபாகனிஸ்தன் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹஸ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான இந்த அணியில் நட்சத்திர வீரர்கள் ரஷித் கான் மற்றும் முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் காயம் காரணமாக இடம்பிடிக்கவில்லை. அதேசமயம் அவர்களுக்கு மாற்றாக அல்லா முகமது கசன்ஃபர், நங்யால் கரோட்டி, பிலால் சாமி போன்ற அறிமுக வீரர்களுக்கு இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் நட்சத்திர வீரர்கள் ரஹ்மனுல்லா குர்பாஸ், முகமது நபி, அஸ்மதுல்லா ஒமர்ஸாய், குல்பதின் நைப் ஆகியோரும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.