
ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கான உதவி பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆர் ஸ்ரீதரை நியமித்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையையும் ஆஃப்கானிஸ்தான கிரிக்கெட் வாரியம் வெளியிட்டது. முன்னதாக ஸ்ரீதர் கடந்த 2014 முதல் 2021 வரை இந்திய கிரிக்கெட் அணியின் பீல்டிங் பயிற்சியாளராக இருந்தார்.
தற்போது 54 வயதான ஸ்ரீதர், இடது கை சுழற்பந்து வீச்சாளர், இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டில் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார். அதன்பின் கடந்த 2001 ஆம் ஆண்டு பயிற்சியாளர் பணியை தொடங்கிய அவர், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பணியாற்றினார். பிறகு 2014 உலகக் கோப்பையில் இந்தியாவின் 19 வயதுக்குட்பட்ட அணியிலும், ஐபிஎல்லில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிலும் பணியாற்றினார்.
மேலும் அவர் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்ட காலத்தில் 300க்கும் மேற்பட்ட சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் செயல்பட்டுள்ளதுடன், அதில் இரண்டு முறை ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் இரண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்களிலும் அவர் இந்திய அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் இருந்தார். மேலும் அவர் ரவி சாஸ்திரியின் துணை ஊழியர்களில் ஒருவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.