
பார்படாஸில் உள்ள கென்ஸிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது . இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது விராட் கோலியின் அரைசதத்தின் மூலமும், அக்ஸர் படேலின் பொறுப்பான ஆட்டத்தின் மூலமாகவும் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்களைச் சேர்த்தது.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 72 ரன்களையும், அக்ஸர் படேல் ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 47 ரன்களையும் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அதிகபட்சமாக கேசவ் மஹாராஜ் மற்றும் ஆன்ரிச் நோர்ட்ஜே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடி வரும் தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க வீரர் ரீஸா ஹென்றிக்ஸ் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் குயின்டன் டி காக் 39 ரன்களிலும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 31 ரன்களையும், ஹென்ரிச் கிளாசென் 52 ரன்களுக்கும், டேவிட் மில்லர் 21 ரன்களுக்கு என விக்கெட்டுகளை இழந்த காரணத்தால் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியதுடன், இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியுள்ளது.