
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி 4-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தொடரை வென்று அசத்தியுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான 5ஆவது டி20 போட்டி பெங்களூருவில் நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஸ்ரேயாஸ் ஐயர், அக்ஸர் படேல் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களைச் சேர்த்தது. இதில் ஸ்ரேயாஸ் ஐயர் 53 ரன்களையும், அக்ஸர் படேல் 31 ரன்களையும் சேர்த்தனர். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணிக்கு பென் மெக்டர்மோட் 54 ரன்களையும், கேப்டன் மேத்யூ வேட் 22 ரன்களை எடுத்த போதும் மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர்.
இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளையும், ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றதுடன், 4-1 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியுள்ளது.