
இங்கிலாந்து மகளிர் அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி நடப்பு மகளிர் ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் இவ்விரு அணிகளும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டியை கொண்ட தொடரிலும் விளையாடி வருகிறது.
இதில் இரு அணிகளுக்கும் இடையே நடந்து முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய மகளிர் அணி மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. இதனையடுத்து தற்போது நடைபெற்று வரும் டி20 தொடரின் முதலிரண்டு போட்டியிலும் ஆஸ்திரேலிய மகளிர் அணி வெற்றிபெற்றதுடன் மகளிர் ஆஷாஸ் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் போட்டி ஜனவரி 30ஆம் தேதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான இங்கிலாந்து டெஸ்ட் அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய மகளிர் அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நேற்றைய தினம் அறிவித்துள்ளது.