
பாகிஸ்தான் அணி தற்சமயம் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலிரண்டு டி20 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்திருந்தன. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்று கடைசி டி20 போட்டி நேற்று டப்ளினில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் லோர்கன் டக்கர் 73 ரன்களையும், ஆண்ட்ரூ பால்பிர்னி 35 ரன்களையும், ஹாரி டெக்டர் 30 ரன்களையும் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் ஷாஹீன் அஃப்ரிடி 3 விக்கெட்டுகளையும், அப்பாஸ் அஃப்ரிடி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணியானது பாபர் ஆசாம் - முகமது ரிஸ்வான் ஆகியோரது அரைசதத்தின் மூலம் 17 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி 2-1 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றி அசத்தியது. இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசி அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த ஷாஹீன் அஃப்ரிடி ஆட்டநாயகன் விருதை வென்றார்.