
இந்தியாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கு தயாராகும் வகையில் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. அதன் ஒருபகுதியாக நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது.
இத்தொடரின் முதல் போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டும், இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணியும் வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு தன்சித் ஹசன் 5 ரன்களுக்கும், ஸகிர் ஹசன் ஒரு ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதன்பின் களமிறங்கிய கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய தாஹித் ஹிரிடோய், முஷ்பிக்கூர் ரஹிம் ஆகியோர் தலா 18 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.