
பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி கடந்த மார்ச் 9ஆம் தேதி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றது.
அதன்படி இறுதிப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில் டேரில் மிட்செல் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் ஆகியோர் அரைசதம் கடந்து அசத்தினர். இதில் டேரில் மிட்செல் 63 ரன்களையும், மைக்கேல் பிரேஸ்வெ ல் 53 ரன்களையும் சேர்க்க, ரச்சின் ரவீந்திரா 37 ரன்களையும், கிளென் பிலீப்ஸ் 34 ரன்களையும் சேர்த்தததன் காரணமாக 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்களைச் சேர்த்தது.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் ரோஹித் சர்மா 76 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 48 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்த நிலையில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த கேஎல் ராகுல் 34 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இதன்மூலம் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியதுடன், மூன்றாவது முறையாக ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றது.