
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. முன்னதாக தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியா 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையில் தோல்வியை சந்திப்பதற்கு பெரும்பாலான சீனியர்கள் சுமாராக செயல்பட்டது முக்கிய காரணமாக அமைந்தது.
அதனால் உச்சகட்ட விமர்சனங்கள் எழுந்த நிலையில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிய அணியை உருவாக்கும் வேலையை பிசிசிஐ ஏற்கனவே தொடங்கியுள்ளது. அதன் காரணமாக டி20 அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற சீனியர்களின் கேரியர் முடிந்ததாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் 2022 டி20 உலக கோப்பைக்கு பின் நியூசிலாந்து, இலங்கை தொடர்களை தொடர்ந்து அடுத்ததாக நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடர்களிலும் ஓய்வு என்ற பெயரில் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
அந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தரவரிசை நம்பர் ஒன் அணியாக இருந்தும் கொஞ்சம் கூட போராடாமல் 209 ரன்கள் வித்தியாசத்தில் மெகா தோல்வியை சந்தித்தது. அதனால் டி20 போலவே டெஸ்ட் கிரிக்கெட்டிலும் புதிய கேப்டனை அறிவித்து இளம் அணியை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் ரசிகர்களிடம் பரவலாக காணப்படுகின்றன.